விவசாயத்தையே முதுகெலும்பாக கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு,காவிரி பாசனத்துடன் பருவமழையைக் கொண்டும் விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தின் நீராதாரத்துக்கு பெரிதும் பயனளிக்கும் வடகிழக்கு பருவமழை பொய்த்தது, கர்நாடகம் கைவிரித்தது, தமிழகத்தின் மின்உற்பத்தி மிகவும் பின்னடைவானது. இதனால் நெல் உள்ளிட்ட அனைத்து விவசாயமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் வீதிக்கு வந்து போராடியதைத் தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களாக உள்ள தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழகஅரசு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளதோடு, சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது.
மேலும் உள்ள வறட்சி மாவட்டங்களை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான குழுஆய்வு மேற்கொண்டு அளிக்கும் ஆய்வு அறிக்கையின்படியே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழகஅரசு அறிவித்துள்ளது.
டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி ஆகிய வட்டங்களில் காவிரி, ஆழ்துளை கிணறு மூலம் 2.65 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தோடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் வளர்க்கப்படும் கால்நடைகளை அடிமாடுகளுக்கு விற்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் காரிப் பருவத்தில் மட்டும் சுமார் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஜனவரியில் கொள்முதல் தொடங்கியது. இந்நிலையில் இதே காலகட்டமான பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு மையத்திலும் சுமார் 700 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி மொத்த மையத்திலும் 44 ஆயிரத்து 100 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு அதே மாவட்டத்தில் 25 மையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதில் 2 மையங்களில் சுமார் 7 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், தமிழகத்தில் மாடு விற்பனைக்கு புகழ்பெற்று விளங்கும் புதுக்கோட்டையில் காளை மாடுகளாக காட்சி அளித்த மாட்டுச் சந்தையானது வறட்சியின் தாக்கத்தால் முல்மேல் போரித்திய துணியாக எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் கன்றுக் குட்டிகளுடன்கூடிய பசுமாடுகளே விற்பனைக்கு வருகின்றன. அதிலும், வாரச்சந்தையான வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கெல்லாம் முடியும் சந்தையில் நண்பகல் வரை காத்திருந்தாலும் யாரும் எதிர்பார்த்த விலைக்கு கேட்காததால் மாடுகளை அடிமாடு விலைக்கு விற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதோடு அறந்தாங்கி சந்தையிலும் விற்பனைக்காக ஓட்டிவரப்பட்ட மாடுகளை விற்பனை செய்யமுடியாமல் மீண்டும் வீட்டுக்கே ஓட்டிச் செல்கின்றனர்.
இந்நிலையைக் கண்டித்து வடகாடு அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் கால்நடைகளை பாதுகாக்க கால்நடைகளுக்கு அரசு மானியவிலையில் தீவனம் வழங்கவும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி கால்நடைகளுடன் அண்மையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகையால் வறட்சியன் தாக்கத்தால் நெல்கொள்முதல் குறைவு, கால்நடைகளை அடிமாடுகளுக்கு விற்பது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரேஷன்கடைகளை கூட்டம் அலைமோதுவது இவைகளையெல்லாம் வறட்சிக்கான ஒரு சான்றாக கொண்டு விரைவில் வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் கூறியது. நிலத்தை நம்பி மாற்றுவழி தெரியாமல் திகைத்து நிற்கும் விவசாயிகளையும், விவசாயைத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு டெல்டா மாவட்டங்களுக்கு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் புதுக்கோட்டை மாவட்ட டெல்டா பகுதிக்கும், அதோடு, 1989-ல் ஒருங்கிணைந்த டெல்டாபகுதியாக அறிவிக்கப்பட்ட ஆலங்குடி பகுதிக்கும் அனுமதித்து நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் போராட்டத்தின் வாயிலாக கொண்டு செல்லப்படும் என்றார்.