ஞாயிறு, 4 டிசம்பர், 2011

குறையும் நீராதாரம். உணருமா அரசு?



தமிழகத்தில் பெரும்பகுதியான மாவட்டங்கள் ஆற்றுப்பாசனம் இல்லாதவைகளாகவே உள்ளன. அதிகமான விளைநிலங்களைக்கொண்டுள்ள பகுதிகளும் இதில் அடங்கும்.
ஆகையால் இப்பகுதிகளில் பிழைப்புக்கு வழியாக விவசாயத்தையே கதியாக கொண்டுள்ளனர். அப்படி என்றால் விவசாயத்துக்கு நீராதாரம் மிகவும் முக்கியம்.
அதற்கு இரண்டு வழிகள் உள்ளன அதில் ஒன்று மழைபெய்து அந்த
மழைநீரை தேக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும். மற்றொன்று ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் நீர்மூழ்கி மோட்டார்களைப் பொருத்தி தண்ணீரை வெளிக்கொணர்ந்து விவசாயம் மேற்கொள்ள வேண்டு்ம.
ஆழ்குழாய் கிணறு முறை என்பது. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பதைப் போலதான். அதாவது பூமிக்கடியில் தண்ணீர் இருந்தால் தான் அதை பாசனத்துக்கு பயன்படுத்த முடியும் இல்லை என்றால் ஆழ்குழாய் கிணறு பலனளிக்காது.
ஆகையால் எந்தமுறையைக் கொண்டுவந்தாலும் மழையும்,அதை தேக்கிவைக்கும் நீர்தேக்க நிலையங்களும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
பெரும்பாலான மாவட்டங்களில் அணைகள் இருப்பதில்லை. அதுபேன்ற மாவட்டங்களில் குளங்கள்தான் அணைகள். அதாவது நீர்தேக்க நிலையங்களாக செயல்படுகின்றன.
அதற்கு உதாரணம் புதுக்கோட்டை மாவட்டம். இம்மாவட்டத்தில் எவ்வித அணைகளே இல்லை. ஆனால் சாகுபடிக்கு பிரசித்தி பெற்றபகுதியாகும். மா, பலா மற்றும் வாழை ஆகிய முக்கனிகளும் ஒருங்கே விளையும் பகுதியாக திகழ்கிறது புதுகை.
இது புதுகைக்கு கிடைத்த பெருக்குரிய விஷயம். அதே சமயம், அங்கு நீராதாரத்துக்காக அவர்கள் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான செயல் என்ன என்று பார்க்கும்போது விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து அறிந்திருப்பதை உணரமுடிகிறது.
தமிழகத்திலேயே இம்மாவட்டத்தில்தான் ஏறத்தாழ 5 ஆயிரத்து 400 குளங்கள் உள்ளன. இக்குளங்களில் மழைகாலத்தில் மழைநீரை தேக்கி வைத்துக்கொண்டு அதைத்தான் தேவையானபோது பயன்படுத்தினார்கள்.
அதற்கு ஏற்றவாறுதான் குளங்கள் அனைத்தும் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாக பிணைக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு குளம் நிரம்பியவுடன் கலிங்குகள் வழியாக வெளியேறி அடுத்தடுத்த குளங்களுக்குச் சென்று இறுதியாக கடலைச் சென்றடையும். முற்காலத்தில் மழையின் அளவு அதிகமாக இருந்தபோதிலும் கடலில் கலக்கம் மழைநீரின் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது.

மன்னர்கள் ஆட்சியைப் போலவேதான் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் நீர்வரத்து ஆதாரங்களுக்கும் குளங்களுக்கும் எந்தவிதமான சேதாரங்களும் இல்லாமல் பராமரித்தனர்.
ஆனால் இன்றோ மக்களாட்சி. இதிலென்ன நடைபெற்றது என்றால் குளங்களும் வாரிகளும் ஆவணங்களில் சிறுதுளிகூட குறையாமல் உள்ளது. ஆனால், அந்த இடத்தில் குளமும் இல்லை. வாரியும் இல்லை.
இப்படியாக குளங்களையும், வாரிகளையும் சமப்படுத்தி குடியிருப்புகள் வந்துவிட்டன. பெருநகரில் தொடங்கிய இந்த அவலம் கடைகோடி கிராமம் வரை தொற்றிக்கொண்டது.
குளத்துப் பாசனம் குன்றிய ஆலங்குடி பகுதியில் ஆழ்குழாய்க் கிணறுகள் தான் பாசனத்துக்கு தற்போதும் கைகொடுக்கின்றன. என்கிற போதிலும் வரத்து வாய்க்கால்கள் இல்லாததால் இருக்கும் குளங்களுக்கும் தண்ணீர் வருவதில்லை. இதுபோன்ற குளங்கள் ஏராளமாக உள்ளன.
இதனால் நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்தபோது ஆலங்குடிக்கு கிழக்கு பகுதியில் சுமார் 100 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. இப்போது 400 அடிக்கும் கீழே சென்று விட்டது. ஏன். ஆயிரம் அடிவரை துளையிட்டும் காற்றைக் கண்ட கிராமமும் உள்ளன. அப்படியென்றால் அந்தக்கிராமத்தில் குடிநீருக்கு மக்கள் படும் அவலம் எப்படி இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள்தான் உணரவேண்டும்.
இவ்வாறு நிலத்தடி நீர் அதிபாதாளத்துக்குச் சென்று கொண்டிருந்தால் பாசனத்திற்குத் தேவையான நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கும், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்பது ஒருபுறம் என்றால் இயற்கை பேரிடர்களுக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படலாமென ஆராட்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது உடனடியாக நீர் வரத்து வாய்க்கால்களிலும் குளங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

. மேலும் அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது மட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணை போகும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் இயற்கை பேரழிவுகளில் இருந்து காப்பாற்றவும் முடியும். தண்ணீர்த் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள இயலும்

தண்ணீர் குறித்து கேரளா, கர்நாடகாவிடம் உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறது தமிழகம். அது நம்முடைய உரிமையயைபெ பெறவேண்டிய ஒன்று. அதேசமயம் உள்ளூரில் உள்ள குறு அணையாக திகழும் குளங்களையும், ஆறாக திகழும் கால்வாய்களையும் கண்டுபிடித்து மேம்படுத்துவதற்கு ஆணை பிரப்பிக்க வேண்டும்.




வடகாடு-கொத்தமங்கலம் இடையே உயர்நிலைப்பாலம் அமைக்கப்படுமா?





வடகாடு-கொத்தமங்கலம் இடையே உயர்நிலைப்பாலம் அமைக்கப்படுமா?
வடகாடு மற்றும் கொத்தமங்கலம் இடையே மழைகாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அம்புலி ஆற்றின் தரைப்பாலத்தை உயர்நிலைப்பாலமாக அமைக்க வேண்டுமெ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையின் கிழக்குப்பகுதியில் திருவரங்குளம் வனப்பகுதியில் மழைகாலத்தில் வழிந்தோடும் மழைநீர் ஒன்றிணைந்து கால்வாய் மூலம் ஆங்காங்கே உள்ள குளங்களை நிரப்பியும், அதில் மிதமிஞ்சிய தண்ணீர் ஆலங்குடியின் புறநகரில் அம்புலி ஆற்றில் கலந்து அங்கிருந்து வடகாடு, நகரம் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில் மழைகாலத்தில் வடகாட்டுக்கும் கொத்தமங்கலத்துக்கும் இடையே சாலையின் குறுக்கே அய்யனார்கோயில் அருகே தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் நிகழாண்டு பெய்த மழைக்கு சுமார் 5 அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மறுபுறம் செல்லமுடியாமல் இருபுறமும் மக்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கொத்தமங்கலம், குளமங்கலம் வழியாக வடகாடு,அறந்தாங்கி இடையே இயக்கப்பட்ட தடம்எண்(17) நகர் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிள், கனரகவாகனங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் புத்தக பையோடு சைக்கிளையும் தலையில் சுமந்துகொண்டு கடந்து செல்கின்றனர்.
இதனால் வடகாட்டில் இருந்து 5 கிலோமீட்டரில் உள்ள கொத்தமங்கலத்துக்கு செல்ல ஆலங்குடி வழியாகவும், ஆவணம்-கைகாட்டி, கீரமங்கலம் வழியாகவும் என எந்த வழியில் சென்றாலும் ஏறத்தாழ 20 கிலோமீட்டர் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது.
மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு வடகாடு-கொத்தமங்கலம் இடையே மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைப்பாலத்தை மாற்றி அவ்விடத்தில் உயர்நிலைப்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது மழைகாலத்தில் சாத்தியக்கூறு இல்லை என்றாலும் கோடை காலத்தில் இதற்கான பணியைத்தொடங்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.

(படவிளக்கம்)
அம்புலி ஆற்றில் தரைப்பாலத்தில் ஓடும் தண்ணீரில் கடந்துசெல்லும் மக்கள்.




சட்டம் ஒழுங்கை காப்பதில் பொதுமக்களுக்கும் பங்குண்டு


(படம் உள்ளது)
சட்டம் ஒழுங்கை காப்பதில் பொதுமக்களுக்கும் பங்குண்டு
ஆலங்குடி, டிச. 1:
சட்டம் ஒழுங்கை காப்பதில் போலீஸாருடன் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு என்றார் காவல் துணைக்கண்காணிப்பாளர் எ.சி. செல்லபாண்டியன்.
ஆலங்குடியில் போலீஸ் மற்றும் பொதுமக்களை இணைத்து கிராம விழிப்புணர்வுக் கமிட்டி அமைப்பது குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசியது.
பெரிய கிராமத்தில் 30 பேரும், சிறிய கிராமத்தில் 20 பேரையும் உள்ளடக்கி இக்கமிட்டி அமைக்கப்படும். அதில் நாளொன்று 3 பேர் வீதம் அந்த கிராமத்தை ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும். தேவையென்றால் போலீஸ் அனுப்பி வைக்கப்படும். பொறுப்பாளர்கள் கிராமத்தில் அரசியல், ஜாதி வேறுபாடின்றி முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்தால் உடன் அந்தந்த காவல் நிலைத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். தற்காப்புக்காக கமிட்டி பொறுப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டார்ச் லைட் மற்றும் லத்தியை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியத் தகவல்களுக்கு 94434 70572 எனது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சமரசம் முன்னிலை வகி்தார்.
காவல் உதவி ஆய்வாளர்கள் கவிதா, கலியபெருமாள், வீராச்சாமி உள்ளிட்டோர் பேசினர்.
நிகழ்ச்சியை கீரமங்கலம காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், செ.விடுதி, கறம்பக்குடி, ரெகுநாதபுரம் ஆகிய காவல் நிலையத்துக்குள்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வளர்கள் பங்கேற்றனர்.
(படவிளக்கம்)
ஆலங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் காவல் துணைக் கண்காணிப்பாளர் எ.சி. செல்லபாண்டியன்.